Tuesday, July 6, 2010

சி.ஆர். ரவீந்திரனின் "ஈரம் கசிந்த நிலம்" நாவல் : (வாசிப்பில் நேசித்தவை)

வாசித்ததில் மிகப் பிடித்தமான நாவல் ஒன்றை இன்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சி.ஆர் ரவீந்திரனின் "ஈரம் கசிந்த நிலம் " நாவல் :

கொங்கு நாட்டு கிராமம் அவர்கள் மொழியில் சொல்லப் போனால் "சாளைகள்" அந்த சாளைகளில் குடியிருந்து கொண்டு வேளாளத் தொழில் செய்து வரும் குறிப்பிட்ட இனத்து மக்களின் வாழ்வியல் கதை தான் ஈரம் கசிந்த நிலம் நாவல்.
கதை நெடுக நிறைய கதாபாத்திரங்கள் அவரவற்குரிய தனித்தனி இயல்புகளோடு சுவாரச்யதுக்குப் பஞ்சமின்றி விவரிக்கப் படுகின்றனர்.
அம்மணி
செங்கணன்
கண்ணுச்சாமி
வெடிக்கார வேலக்கவுண்டர் (அவரது மகன்கள் துரை மற்றும் மாணிக்கம்)
சாக்குப்பை நாயக்கர் (கிராமத்தின் எல்லையிலிருந்து சாளைகள் பிரியுமிடத்தில் டீக்கடை வைத்திருப்பவர்)
காளியப்பன்

இன்னும் பலர்.

அம்மணி சொந்த பூமிக்காரி,அவள் தனது அண்ணன் செங்கணன் பாதுகாப்பில் வாழ்கிறாள் ,கல்யாணத்திற்கு தயாராய் நிற்கும் அம்மணிக்கு எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் சரி சொல்ல மனமில்லை.காரணம் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு தன் சொந்த நிலத்தை விட்டுப் பிரிய மனமில்லை,கல்யாணத்திற்கு பிறகும் தன் வாழ்வு அந்த நிலத்தோடு அந்த மண்ணோடு ஒட்டியே இருக்க வேண்டும் என அவள் விரும்புகிறாள்,ஊர் திருவிழாவின் போது தான் அம்மணி கண்ணுச்சாமியைப் பார்க்க நேர்கிறது.

கண்ணுசாமியின் மீது அவளுக்கு காதல் வரக் காரணங்கள் ஏதும் தெளிவாக இந்தக் கதையில் சொல்லப் படவில்லை.அவள் அவனை விரும்புகிறாள்அவ்வளவு தான் ,அவனுக்கும் அம்மணி என்றால் இஷ்டம் .கண்ணுசாமியின் தன் தாத்தா வீட்டில் தனது கணக்காளன் பணி நிமித்தம் வந்து தங்கினாலும் கூட அவனது தாய் தன் சாளையில் பனையேறியாய் இருந்த மூக்கனுடன் ஓடிப் போனவலாதளால் அவனை தன் பேரன் என்று சொல்லிக் கொள்ளாமல் ஒன்று விட்ட தம்பி மகனாகவே ஊரார் முன் அடையாளபடுத்துகிறார் அவனது தாத்தா.

இதற்கிடையில் வெடிக்கார வேலக் கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் என்றால் ஊரில் ஒரு மரியாதை கலந்த பயம் நிலவுகிறது ,அப்படி இருக்க வெடிக்காரர் நிலத்தை குத்தகை பார்க்கும் காளியப்பன் குடும்பம் நிலப் பிரச்சினையில் வெடிக்காரரையும் அவரது மகன்களையும் சந்திக்கு இழுத்து விஷயம் காவல்துறை வரை போய்விட.நிலத்துக்குச் சொந்தக் காரன் எனும் வேடிக்கார்ரின் வீம்பு தொய்வடையத் தொடங்குகிறது.காளியப்பன் குடும்பத்தார் மிகச் சிறந்த உழைப்பாளிகள் வெடிக்காரர் வெறும் தரிசாக குத்தகைக்கு விட்ட அவரது நிலத்தை பண்படுத்தி கிணறெல்லாம் ஆழப்படுத்தி பாசனத்திற்கும் வற்றாத வழி செய்து மண்ணைப் போன்னாக்கியது காளியப்பன் குடும்பம் தான், தரிசாய் கொடுத்தது தங்கமாய் ஜொலித்து வருமானம் கை மேல் கிடைக்கும் நேரத்தில் குத்தகை ரத்து செய்து விட்டு நிலத்தை ஒப்படைத்து விட்டுப் போ என்றால் காளியப்பன் சும்மா இருப்பானா!? அவனளவில் அந்த சுற்று வட்டாரத்தில் குத்தகைதாரகளாய் ஒன்று திரட்டி கையெழுத்து வாங்கி அவர்களுக்கென போராட ஒரு சங்கம் அமையுமளவில் விஷயம் போய்விடுகிறது .

இவர்கள் பிரச்சினை நீதிமன்றம் வரை போக வெடிக்காரர் தோற்றுப் போகிறார். வழக்கை நடத்தியே அவரது பணம் கரைய விருந்து கேளிக்கைகள் என காவல்துறை ஆட்களையும் கையில் போட்டுக் கொண்ட காளியப்பன் குத்தகை முடியும் மட்டும் அதிலிருந்து வருமானம் முழுக்க பெறுமட்டும் வெடிக்காரரின் சாளையிலேயே இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது .இதனால் வெறுத்து கோபம் தலைக்கு ஏறிய வெடிக்காரரின் மகன் மாணிக்கம் காளியப்பனை சுட்டு விட அவன் இறந்து விடுகிறான்,அவன் மனைவியும் குழந்தைகளும் அனாதைகளாய் அந்த சாளையை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரை விஷயம் கைமீறிப் போகிறது .

இதற்கிடையில் அம்மணி கண்ணுச்சாமி கதை ,நிலத்தின் மீதும் வேளாண்மையின் மீதும் மிக்க விருப்பம் கொண்டவளாய் இருந்த அம்மணி கண்ணுச்சாமியுடன் மிகுந்த காதலில் இருந்தாள்.வீட்டார்க்கு விஷயம் தெரியாது. இப்படி உருண்ட நாட்களில் கண்ணுச் சாமியின் தாத்தா அவனுக்கு தன் அந்தஸ்துக்கு ஏற்ற பணக்காரப் பெண் ஒருத்தியை கல்யாணம் பேசி முடிக்க முடிவு செய்கிறார்,இது தெரிந்தவனாய் இருந்தும் கண்ணுச் சாமியால் அவனது தாத்தாவிடம் மறுப்பு சொல்ல முடியவில்லை,காரணம் தான் ஒரு பனையேறியின் மகன் எனும் உறுத்தல் அவனுக்கு இருந்ததால் அவன் மிகுந்த தயக்கத்தோடு கதை நெடுக கூச்ச சுபாவியாய் இருந்தான்.

செங்கணன் தன் மனைவி மக்களோடு மனைவி வீட்டு விசேசத்திற்கு என புறப்பட்டுச் சென்ற ஒரு நாள் இரவில் கண்ணுச்சாமி அம்மணியின் வீட்டுக்கு வருகிறான்,அகஸ்மாத்தாக அந்த இரவு அம்மணி கண்ணுச் சாமியுடன் இருப்பதை எதோ ஒரு வேலையாக இரவோடு இரவாக வீடு திரும்பும் செங்கணன் பார்த்து விட நேர்கிறது,ஆத்திரத்தில் விளைந்த கோபத்தில் அவன் அம்மணியை கண் முகம் தெரியாமல் அடித்து விட மிகுந்த வைராக்கியக்காரியான அம்மணி நொடியும் யோசிக்காமல் இருட்டில் தன்னுடன் இருந்தவன் யாரென்றும் கூற விருப்பம் இல்லாதவளாய் ஓடிப் போய் ஊர் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் காளி கோயில் கிணற்றில் விழுந்து இறந்து போகிறாள்.

இதற்கு மேல் கதை என்ன?

அம்மணி கிணற்றில் விழுந்து தான் இறந்தாள் எனும் சுவடே இன்றி இரவோடு இரவாக ஊர்ப் பெரிய கவுண்டர் சில மாதாரிகளை வைத்து அரவம் இன்றி சுடுகாட்டில் அம்மணியை எரித்து சாம்பல் ஆத்தி வீடு திரும்புகின்றனர்.அவர்களைப் பொறுத்த வரை அம்மணி அந்நிய ஆடவனோடு அந்த இரவில் இருந்த செய்தி மிக்க அவமானமான ஒன்று, அவன் யாரென்பது முக்கியமல்ல,வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அம்மணி அப்படி தன் மனதை இழந்தது அந்த ஊர் மற்றும் அதன் மக்களைப் பொறுத்தவரை அசிங்கமான ஒரு விசயமாகவே பார்க்கப் படக் கூடும் எனும் பயமே அம்மணியின் கதையை இப்படி முடித்து வைத்தது.

நாவல் பேசும் செய்திகள்:

கதையில் நிழலாய் இருக்கும் முக்கிய கதாபாத்திரம் நிலம்.நிலத்தின் மீது பெரும் பற்று கொண்ட வேளாண்மையை மட்டும் முக்கிய ஜீவிதமாய் கொண்டு வாழ்ந்த வேளாளக் கவுண்டர் இன மக்களை கதை மாந்தர்களாய் கொண்டு இந்த நாவல் நகர்வதால் நிலம் தான் இந்த நாவலின் ஹீரோ .அம்மணி தன் கல்யாணத்தை தள்ளிப் போடக் காரணம் அவள் தனது சொந்த நிலத்தின் மீது வைத்த ஆசையே,

வெடிக்காரர் மற்றும் அவரது மகன்களின் மிரட்டுதலான அறிமுகத்துக்கு காரணம் அவர்களிடம் அளவுக்கதிகமாய் சேர்ந்து போயிருந்த நிலமே ,சும்மா பாழாகிறதே என்று தான் காளியப்பனுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.ஆனாலும் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் தாமே என்ற அகந்தையை ஒழிக்க இயலாததால் காளியப்பனுக்கும் வெடிக்காரருக்கும் பெரும்பிரச்சினை வெடித்து பகை முற்றுகிறது.காளியப்பன் மாணிக்கத்தால் சுட்டுக் கொல்லப்படுவதோடு ஓய்கிறது இந்த சண்டை.

இப்படி நிலமே இங்கே சகல விளைவுகள் மற்றும் அவற்றின் எதிர் விளைவுகளுக்கும் காரணம் ஆகிறது.

மண் மணக்க மணக்க அந்த கொங்கு வட்டார மக்களின் நிதர்சன வாழ்வை அப்படியே அவர்கள் வட்டார மொழி வழக்கில் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து போல சுவை பட எழுதி மனதை ஏற்கிறார் ஆசிரியர் சி.ஆர்.ரவீந்திரன்.

இந்த நாவல் வெளிவந்து இன்று வரைக்கும் பாரதிய பரீக்ஷித் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது மேலும் யாளங்களை அறிவியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் துணைப்பாடநூல் பாடத் திட்டத்திலும் இணைக்கப் பட்டுள்ளது.

கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நூல்களில் ஒன்றேனே சொல்லலாம்.

வட்டார வழ்கக்கில் குறிப்பிட்ட இன மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியலை அழகாக கண் முன்னே காட்சிப் படுத்தியமையே இந்த நாவலின் வெற்றி .


ஆசிரியர் - சி.ஆர்.ரவீந்திரன்
புத்தகம் - ஈரம் கசிந்த நிலம்
வெளியீடு - நினைவில் இல்லை.
விலை - ரூ 30

Saturday, July 3, 2010

இதுவரை வாசித்த புதினங்கள்

இதுவரை வாசித்த புதினங்கள் :

கல்கி - ௧.பேங்கர் விநாயக் ராவ்,பொன்னியின் செல்வன்சிவகாமியின் சபதம்
நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்கள் பொன் விலங்கு
தி.ஜானகிராமன் - அம்மா வந்தாள்மோகமுள்செம்பருத்தி
சாவி வாஷிங்டனில் திருமணம் ஆப்பிள் பசி விசிறி வாழை பழைய கணக்கு
தேவன் லக்ஷ்மி கடாட்சம் துப்பறியும் சாம்பு ஸ்ரீமான் சுதர்சனம்
ஜாவர் சீதாராமன் -பணம்,பெண்,பாசம்
ராஜம் கிருஷ்ணன்-வேருக்கு நீர்
லக்ஷ்மி-பெண் மனம்
கி.ராஜநாராயணன் -கோபல்ல கிராமம்,பெண் மணம்,வயது வந்தோர்க்கு மட்டும்,அந்தமான் நாயக்கர்,பிஞ்சுகள்
நாஞ்சில் நாடன் -எட்டுத் திக்கும் மதயானை
பொன்னீலன்- கரிசல்,புதிய தரிசனங்கள் ,சிறுகதை தொகுப்பு ஒன்று
எஸ்.ராமகிருஷ்ணன் - முழு சிறுகதை தொகுப்பு ,யாமம்,வாசக பர்வம்,நகுலன் வீட்டில் யாருமில்லை,பேசத் தெரிந்த நிழல்கள்.
ஜெயமோகன் - ஊமை செந்நாய்,பத்ம வியூகம்,மத்தகம்,லங்கா தகனம்,டார்த்தீனியம்,அம்மன் மரம்
சி.ஆர்.ரவீந்திரன் -ஈரம் கசிந்த நிலம்
ஜெயந்தன் -நிராயுதபாணியின் ஆயுதங்கள் (முழு சிறுகதை தொகுப்பு)
தகழி சிவசங்கரன் பிள்ளை- ஏணிப்படிகள்,செம்மீன்
எம்.டி.வாசுதேவன் நாயர் -மூடுபனி,இரண்டாம் இடம்
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை -மலைக்கள்ளன் ,காணாமல் போன கல்யாணப்பெண்
சு.சமுத்திரம் -கேள்வித்தீ
தங்கர் பச்சான் -ஒன்பது ரூபாய் நோட்டு
சுஜாதா- யவனிகா,அனிதாவின் காதல்கள்,கணையாழியின் கடைசி பக்கங்கள்,பிரிவோம்,சந்திப்போம்,ப்ரியா,மீண்டும் ஜீனோ ,அனுமதி (சிறுகதைகள்),ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் .
அகிலன்- வேங்கையின் மைந்தன்

கர்ண பரம்பரைக்கதைகள்

கர்ண பரம்பரைக் கதைகள் :

அதென்ன கர்ண பரம்பரைக் கதைகள்? கர்ணனின் பரம்பரைக் கதைகளா? இல்லை பல நெடுங்காலங்களாக நம் முன்னோர்களால் செவி வழிக் கதைகளாக சொல்லப் பட்டு வரப் படும் கதைகளே கர்ணபரம்பரைக் கதைகள்.இப்படி இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்கிலெடுத்தால் லட்சக் கணக்கில் கதைகள் தேறும் .இந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன,பெரும்பாலும் வீரத்தில் சிறந்து விளங்கிய அன்றைய ஆண்கள் அல்லது பெண்களைப் பற்றிய கதைகளே இவை.

காத்தவராயன் கதை
மதுரை வீரன் கதை
பொம்மக்கா,திம்மக்கா கதைகள்
சுடலை மாடன் கதை

இப்படி சில உதாரணங்களை கூறலாம்.

இதிகாசங்களின் கிளைக் கதைகளாக கூறப் படுபவை சிலவும் கூட கர்ண பரம்பரைக் கதைகளாக இருக்கலாம் என்ற ஐயம் உண்டு,மூலக் கதைகளில் இருந்து பிரிந்து கதையோடு ஒட்டாமல் கதை மாந்தர்களோடு மட்டும் ஓரிழை தொடர்பில் பல கதைகள் காப்பியங்களிலும் இதிகாசம் மற்றும் புராணங்களிலும் விரிகின்றன.அவை நீதிக் கருத்துகளை சுட்டிக் காட்டவோ அல்லது கதை மாந்தர்களின் பூரணத்துவத்தை பிரஸ்தாபிக்கவோ இந்த விதமாக கூறப் படும் கதைகள் அதாவது ஆதாரங்கள் எதுவும் இன்றி மிகப் பெரிய கதைகளைத் தழுவி செவி வழிக் கதைகளாகக் கூறப் படுபவை கர்ண பரம்பரைக் கதைகள் எனப்படுகின்றன.

வேறு உதாரணங்கள் இருப்பின் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அறிமுகம்.

டைரி எழுதும் வழக்கம் இல்லை ; கடந்த நாட்களை மறந்து விடாமல் இருக்க அறிந்ததை,தெரிந்ததை பதிந்து வைக்கும் முயற்சியே இந்த வலைப்பூ,நண்பர்களுடனான மாலை நேரக் காபியில் இருக்கும் சுவாரஸ்யம் ,குழந்தைகளோடு விளையாடுகையில் கிடைக்கும் குதூகலம் ,வீட்டு முற்றத்தில் சொந்தங்களுடன் நிலாச்சோறுண்ட மயக்கம் ,இப்படிச் சில இங்கே கிடைத்து விட்டால் எனது இந்த முயற்சியை வெற்றி என நினைத்துக் கொள்வேன் . லைப்ரரிக்கு வாருங்கள் பேசலாம்.